விமலைத் தாக்க முயன்ற மொட்டுக் கட்சி எம்.பி.; அரசுக்குள் தீவிரமடையும் முரண்பாட்டின் எதிரொலி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கட்டகொட அமைச்சர் விமல் வீரவன்ஸவை தாக்க முயன்றார் என தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த கருத்து வேறுபாடு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20ஆவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் காணப்படும் விடயம் குறித்து தனது கட்சியான தேசிய சுதந்திர முன்னணி அதிருப்தி வெளியிட்டுள்ள போதிலும் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஜயந்த கட்டகொட ஈடுபட்டார் என விமல் வீரவன்ஸ பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜயந்த கட்டகொட, விமல் வீரவன்சவைத் தாக்க முயன்றுள்ளார். இதனை ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். விமல் வீரவன்ஸவின் கட்சிக்கு ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளமையும், ஜயந்த கட்டகொட பஸில் ராஜபக்ஷவின் விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது.