சர்வதேச அழுத்தங்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணியோம்; உதய கம்பன்பில உறுதி

தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கர் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –

“2009 இல் பிரித்தானியாவின் வெளிநாட்டலுவல்கள் செயலாளரும், பிரான்ஸின் வெளிநாட்டுறவுகள் அமைச்சரும் இலங்கைக்கு வந்து யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தம் பிரயோகித்தனர்.

ஆனால் யுத்தம் நிறுத்தப்படவில்லையல்லவா? எனவே தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக வந்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக இலங்கை சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடைய நாடு என்பதைக் காண்பித்தார்.

தற்போது அவரே ஜனாதிபதியாகவுள்ளார். எனவே, இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது என்ற தீர்க்கமான உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.