சம்பளம் போதாது; பதவி விலகுகின்றார் பிரித்தானியப் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சம்பளத்தைக் காரணம் காட்டி பதவி விலகத் தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இருந்த பொறிஸ் ஜோன்சன் மாதம் இரு உரைகள் ஆற்றினாலே போதும், 2 இலட்சத்து 6 ஆயிரத்து 885 டொலர் – நம்நாட்டு மதிப்பில் 3 கோடியே 82 இலட்சத்து 73 ஆயிரத்து 725 ரூபாவை ஊதியமாகப் பெற்றார். தவிர டெய்லி ரெலிகிராப் கட்டுரை எழுதுவதன் மூலம் 30 ஆயிரம் டொலர்களை மாதம் பெற்று வந்தார். இதன் மூலம் ஆண் டுக்கு அவர் இலங்கை மதிப்பில் ஆறரைக் கோடி ரூபாவை சம்பாதித்தார்.

ஆனால், இப்போது அவருக்கு ஊதியமாக ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 400 ஸ்ரேலிங் பவுண்ஸ் – அதாவது 3 கோடியே 60 இலட் சம் ரூபாவே கிடைக்கிறது. இது அவரின் செலவுக்கு போதுமானதாக இல்லை.

ஏனெனில் அவருக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை விவாகரத்து செய்ததையால் குறிப்பிட்ட ஒரு தொகையை தாபரிப்பு பணமாக செலுத்த வேண்டியுள்ளது. எனவே, சம்பளம் போதாமையை காரணம் காட்டி அவர் தனது பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று பெயர் வெளியிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.