கைதான ரிஷாத்துக்கு 27 ஆம் திகதி வரையில் விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளை வீடொன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 6 குழுக்களால் தேடப்பட்டு வந்த அவரை, அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்றுக் கைதுசெய்தனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளைப் பகுதியில் வைத்து சி.ஐ.டியினரால் கைதானார். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட தையடுத்தே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அரச வளத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, தேர்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரிஷாத்தைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த ஆறு நாட்களாகக் கொழும்பு, மன்னார் மற்றும் கிழக்கில் பல பகுதிகளிலும் தேடுதல்கள் நடைபெற்றன. 6 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே நேற்று 6 ஆம் நாள் அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.