மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சமர்; பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மக்குந்தர மதூஷ் சுட்டுக்கொலை

கொழும்பு மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான மக்குந்தர மதூஷ் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையிலேயே இந்த துப்பாக்கிச் சமர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் மதுஷ் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மதுஷ் மரணமடைந்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட மதூஷ் பிரபல போதைவஸ்த்துக் கடத்தல்காரர் என பொலிஸார் தெரிவித்தனர். டுபாயிலிருந்த அவர் அங்கு கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்.

மாளிகாவத்தை வீடமைப்புப் பகுதியில் மதூஷ் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் 22 கிலோகிராம் ஹிரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன் பெறுமதி 220 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனைவிட இரண்டு கைத் துப்பாக்கிகளும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே பொலிஸார் தமது பாதுகாப்பலிருந்த மதூஷை அழைத்துக் கொண்டு அங்கு சென்றிருந்தார்கள்.

அப்போதே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது.