20 ஆவது திருத்தம் குறித்து 5 நாள் விவாதத்தைக் கோர எதிர்க்கட்சிகள் முடிவு

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் பாராளுமன்றத்தில் ஐந்து நாட்கள் விவாதம் கோருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை விசேட கட்சித் தலைவர்கள் கூட்ட மொன்று நடைபெறவுள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு சபா நாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போதே 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஐந்து நாட்கள் விவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கோரவுள்ளது. எனினும், இரு நாட்கள் விவாதத்தை வழங்குவதே அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது எனத்தெரியவருகின்றது.

அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி சபாநாயகர் அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.