கொரோனா 2 ஆவது அலையைப் பயன்படுத்தி 20 ஐ நிறைவேற்ற அரசு திட்டம்; சஜித் குற்றச்சாட்டு

“கொரோனா வைரஸ் தொற்று அலையின் முதல் சுற்றைப் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்திய அரசு, இரண்டாம் சுற்றை அரசமைப்பின் 20ஆம் திருத்தத்தை நிறைவேற்றப் பயன்படுத்துகிறது” என அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொரோனா தொற்று அலை நாட்டில் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“நாட்டில் தற்போது பல பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளன. அரசின் பொறுப்பற்ற தன்மையே கொரோனா இரண்டாம் சுற்றாக பரவலடைய முக்கிய காரணம்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நிபந்தனைகளற்ற ஒத்துழைப்பை எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு வழங்கு கின்றோம்” என்றார்.