யாழ்ப்பணத்தில் இது வரையில் 501 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணத்தில் இதுவரை 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“யாழ்.மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று சற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அபாயமான சூழல் இன்னும் விலகவில்லை. எனவே, அனைவரும் கவனமாகச் செயல்பட வேண்டும். யாழ்.மாவட்டத்தில் 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28இல் இருந்து தற்போது 18 ஆகக் குறைவடைந்துள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு மாத்திரமே யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், யாழ். மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன், அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதுடன் நீண்டதூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விவரங்களை சுகாதாரப் பிரிவினருக்குக் கட்டாயமாகத் தெரியப்படுத்தவேண்டும்.

தேவைப்படின், அவர்களுக்குரிய பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றார்.