ரிஷாத் தொடர்ந்தும் தலைமறைவு; கணக்காளரும், மெய்ப்பாதுகாவலரும் கைது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தலைமறைவாகியுள்ளார்.

ரிஷாத் பதியுதீனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சட்டமா அதிபர் நேற்று விடுத்த உத்தரவை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கு ஆறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுக்கள் கொழும்பு, மன்னார், புத்தளம் ஆகிய இடங்களில் ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தேடி வருகின்றன.

அவர் தலைமறைவாகியதையடுத்து அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பயணத் தடை சி.ஐ.டி.யினரால் பெறப்பட்டுள்ளது.

இதேவேளையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கணக்காளர் அழகரத்தினம் மனோரஞ்சன் என்பவர் கிருலப்பனை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் ரிஷாத் பதியுதீன் முன்னர் அமைச்சராக இருந்தபோது அவரது மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரும் கைதாகியுள்ளார்.

ரிஷாத் பதியுதீன் உட்பட மூவரைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவுக்கு அமையவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ரிஷாத்தின் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோத்தர் நேற்று வெள்ளவத்தைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் இரண்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்டுள்ள அந்த வாகனங்களிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், நான்கு மகசின்கள், 48 ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.