கொரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் பதிவு செய்யப்படும்; உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்கள்

கொரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த மருத்துவ நிபுணர் சௌமியா சுவாமிநாதன் கூறும்போது,

“தற்போதுவரை சுமார் 40 கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இதில் 10 மருத்துகள் ஆய்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளன. எனவே, கிடைத்துள்ள தரவுகளை வைத்துப் பார்த்தால் கொரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யப்படும்” என்றார்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான, குழுஎதிர்ப்பு சக்தி, (ஹெர்ட் இம்யூனிட்டி) நெறிமுறையற்றது, நியாயமற்றது என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறுகையில்:-

“பொது சுகாதார வரலாற்றில் ஒருபோதும் குழு நோய் எதிர்ப்பு சக்தி பெருந்தொற்றுக் காலத்தில் பயன்பட்டது கிடையாது. கொரோனாவுக்கு எதிரான குழு நோய் எதிர்ப்பு சக்தி நெறிமுறைக்கு உட்பட்டது இல்லை. குழு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நமக்குச் சில துளிகள்தான் தெரிந்துள்ளன. முழுமையாக இல்லை.

பயங்கரமான வைரஸை அனைவருக்கும் பரப்புவது என்பது நியாயமற்றது. மேலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் இருக்கும் என்றும் தெரியவில்லை” என்றார்.