2,000 பேரைத் தனிமைப்படுத்துவதற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன; இராணுவத் தளபதி

நாட்டில் 2,000 பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையங்கள் ரிதகதியில் அமைக்கப்பட்டு வருகின்றன என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் போதுமானதாக இல்லை. தற்போது சுமார் 10 ஆயிரத்து 500 பேர் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய சூழலில் இரண்டாயிரம் பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. நாம் இதுவரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சமூகத்துடன் இணைத்துள்ளோம்.

எனவே, முடியாதது என்று எதுவும் இல்லை. நாட்டு மக்களின் நன்மைக்காக, எத்தனை பேரை வேண்டுமானாலும் இராணுவம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தத் தயார்” என்றார்.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் யார் என்பது குறித்தும் இராணுவத் தளபதி தெளிவுபடுத்தினார்.

“தொற்றுக்குள்ளான பெண் நோய்வாய்ப்படுவதற்கு முன்னர் அவருக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. அவரைப் பின் தொடர்ந்தபோது சுமார் 33 பேர் கொண்ட குழு அதே நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளமை உறுதியானது. இன்னும் தொற்றாளர்கள் உள்ளனரா? என்று தேடி வருகின்றோம்.

இவ்வாறு, இருக்கையில் இதுதான் ஆரம்பப் புள்ளி என எந்தவித நம்பிக்கையுமின்றிச் சொல்வதில் நியாயமில்லை. புலனாய்வுப் பிரிவு உட்பட அனைத்து இராணுவக் கட்டமைப்பும், பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும் சுகாதார பாதுகாப்புக்காக செயல்பட்டு வந்தாலும், அதனால் எந்த வகையிலும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படவில்லை” என்றார் அவர்.