எனது உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு ரணில் உத்தரவிட்டிருந்தார்; மைத்திரி சாட்சியம்

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியங்களைப் பதிவு செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகிச் சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசில் குற்றவியல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைகள் அனைத்தும் அரச சார்பற்ற அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டதோடு அவை அரசியல் அழுத்தங்களுடன் இடம்பெற்றவை என்றும் மைத்திரிபால் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மணித்தியாலங்களுக்கும் மேலாக ஆணைக்குழுவில் நேற்று வாக்குமூலம் அளித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்புக்கிணங்கவே அவர் இவ்வாறு முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை, நாளை புதன்கிழமையும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.