கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்; தொற்று நோயியல் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழு உலகிலும் காணப்படுவதாகவும், அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்கமுடியாது எனவும் பிரதம தொற்று நோயியல் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தற்போதைய சூழலில் நாம் கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். கொரோனா வைரஸ் ஒரு உலகளாவிய தொற்றுநோய். அதன் பரவல் இன்று அல்லது நாளை முடிவடையாது. இலங்கையில் மட்டும் இதனைக் கட்டுப்படுத்தி சுதந்திரமாக இருக்க முடியாது.

எனவே, கொரோனா தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும். முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து சமூகச் செயற்பாட்டை இடைக்கிடையே நிறுத்துவதன் ஊடாக அதனைக் கட்டுப்படுத்த முடியாது. கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம், அதே நேரத்தில் சாதாரண வாழ்க்கையை வாழவேண்டிய தும் அவசியம்.”