20 ஆவது திருத்தத்துக்கு இரண்டு பெளத்த பீடங்கள் கடும் எதிர்ப்பு; நெருக்கடிக்குள் அரசாங்கம்

ஜனாதிபதி கோட்டாபய அரசு கொண்டு வரும் அரசமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு எதிராக பௌத்த மத பீடங்கள் திடீரெனக் கிளர்ந்துள்ளன. சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் இந்த அரசமைப்புத் திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பௌத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் நேற்று பகல் பகிரங்க செய்தியாளர் மாநாடு கூட்டிக் கோரியுள்ளன.

கோட்டாபயவை ஜனாதிபதி பதவிக்கும் பொதுஜன பெரமுனவை ஆட்சிப்பீடத்துக்கும் கொண்டு வருவதற்கு அயராது உழைத்த நாரஹன்பிட்டிய அபேராம விஹாரையைச் சேர்ந்தவரும், ‘துறவிகள் குரல்’ அமைப்பின் தலைவருமான முத்தெட்டுவேகம ஆனந்த தேரர், வெல்லம்பிட்டிய விகாராதிபதி மெதகொடஅபேதிஸ்ஸ தேரர், எல்லே குணவன்ஸதேரர் போன்ற பலரும் அண்மைக் காலத்தில் 20ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை பகிரங்கமாக வெளியிட்டு வரும் சமயத்திலேயே, நேற்று பகல் அதிரடிக் காய் நகர்த்தலாக அமரபுர மற்றும் ராமன்ய பீடங்களின் சார்பில் அவற்றின் செயலாளர்கள் செய்தியாளர்கள் மாநாடு கூட்டி,இது தொடர்பான பகிரங்க அறிவிப்பை விடுத்தனர்.

இரண்டு மத பீடங்களினதும்சார்பில் ஒப்பமிடப்பட்ட கூட்டறிக்கை அங்கு வெளியிடப்பட்டது. அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றத்தில் பெறுவதற்குத் தீவிரமாக முயற்சித்து வரும் கோட்டாபய அரசுக்கு பௌத்தபீடங் களின் திடீர் கிளர்ச்சி பெரும் பின்ன டைவு என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.