கிச்சைக்கு இடையே வெளியே வந்த டிரம்ப் ! ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்

உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி டிரம்பும் ஆளாகி உள்ளார். 74 வயதான அவருக்கும், 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ந் தேதி உறுதியானது, உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்குதல் டிரம்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது தேர்தல் பிரசாரம் முடங்கி உள்ளது. முதலில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிகிச்சை பெற்ற டிரம்ப், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 2-ந் தேதி பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சேர்க்கப்பட்டார். அங்கு விரைவில் குணம் அடைவதற்கு வசதியாக அவருக்கு ‘ரெம்டெசிவிர் சிகிச்சை’ அளிக்கப்பட்டது.

டிரம்ப் உடல் நிலை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களுக்கும் மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்களுக்கும் முரண்பாடுகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்கு மத்தியில் டிரம்ப், மருத்துவமனை முன்பாக உள்ள சாலையில் காரில் பயணித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். டிரம்ப் திடீரென வெளியே வந்தது அவரது ஆதரவாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. டிரம்ப் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் திங்கள் கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடும் எனவும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.