பருத்தித்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்; மூன்று இளைஞர்கள் நேற்று கைது

பருத்தித்துறையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கற்கோவளம் – புனித நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரு இளைஞர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலை சிவில் உடையில் சென்ற பொலிஸார் இருவர் தடுக்க முயன்றபோது, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த கே.ஜெயக்கொடி (வயது 52) என்பவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று விசாரணை நடத்திய பருத்தித்துறைப் பொலிஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வரும் பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.