முடியாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கே 20 ஆவது திருத்தச் சட்டம்; யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் உரை

“இருபதாம் திருத்தச் சட்டம் குடியரசு அரசியல் யாப்பு என்ற பெயரில் முடியாட்சியை ஏற்படுத்தும் திருத்தமே இது” எனக் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடந்த ‘இருபதாவது திருத்தமும் அரசியல் விளைவுகளும்” என்ற ஆய்வரங்கில் பங்கேற்று ‘இருபதாவது அரசமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் என்ற தலைப்பில் சட்ட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-

“இருபதாம் திருத்தச் சட்டம் குடியரசு அரசியல் யாப்பு என்ற பெயரில் முடியாட்சியை ஏற்படுத்தும் திருத்தமே இது. இருபதாம் திருத்தம் வருவதற்கு முன்னரே முடியரசன் போய்ச் சொல்கிறார் நான் வாயால் சொல்வதெல்லாம் சுற்று நிரூபம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

முன்னர் 18 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அரசியல்வாதி. அவர் அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டி ருந்தாலும், ஓர் அரசியல்வாதிக்கு சில விளக்கங்கள் உண்டு. சில விடயங்களை எப்படி செய்யலாம், செய்ய முடியாது என்ற நிதானம் அனுபவத்திலாவது வந்திருக்கும். இன்று நிலைமை அப்படியல்ல.

19 அகற்றுவோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வாக்குறுதி அளித்தார். பத்தொன்பதாம் திருத்தத்தை அகற்றுவோம் என்பதற்கும் நிறைவேற்றதிகாரத்தை வலுவாக்குவோம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. நாட்டவர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர்.

இந்த எதிர்ப்பை நாம் வலுவாகத் தெரிவிக்க வேண்டும். நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்காக வாக்களிக்க வேண்டும்” என்றார்.