உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக மைத்திரியும், ரணிலும் தண்டிக்கப்பட வேண்டும்; சரத் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். கட்டாயமாக இந்த இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்று இடம் பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் பேசுவதானால் அதன் பொறுப்பை, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஏற்கவேண்டும்.

அமைச்சரவையில் இருந்தாலும், அனைவருக்கும் அதில் தலையிட முடியாது. அவர்கள் இருவருக்கும் தான் அந்தப் பொறுப்பு உள்ளது. தோல்வி ஏற்பட்டால், அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்கள் தான் ஏற்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு என்பது அனைவராலும் தலையிடக்கூடிய ஒன்றல்ல.

கேள்வி:- புலனாய்வுப் பிரிவு தொடர்பில் நன்கு அறிந்துள்ள தாங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? நாடு ஆபத்தில் உள்ளது என வெளியில் வந்து ஏன் வெளிப்படுத்தவில்லை?

பதில்:- அமைச்சரவையில் இருக்கும்போது பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரம் தான் பாதுகாப்பு குறித்துப் பேச முடியும். எனக்கு இருந்தது வனவிலங்கு. எனது பொறுப்பாக இருந்தது வன விலங்கு குறித்த பேசுவது. தனிப்பட்ட முறையில் நான் அவர்களுடன் பேசியுள்ளேன்.

உத்தியோகபூர்வமாகப் பேச முடியாது. எனினும், நாம் கூறிய விடயங்களை ஒருபோதும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பாரியளவில் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் உருவாகியது. கட்டாயமாக இந்த இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.