ஊரடங்கு சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டில் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் யுவதி ஒருவர் 4 பேர் கொண்ட இளைஞர் குழுவால் கடந்த மாதம் 14 ஆம் திகதி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் வெளியில் கூறக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் நாக்கை துண்டித்தும், கழுத்து மற்றும் முள்ளந்தண்டை உடைத்தும் அந்தக் குழு கொடூர தாக்குதல் புரிந்திருந்தது.
டில்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அப் பெண் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். ஆனால், அவரின் உடலை, பெண்ணின் சொந்த இடமான உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸுக்கு கொண்டு சென்ற பொலிஸார் நேற்றுமுன்தினம் அதிகாலை தகனம் செய்தனர்.
அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியும், கட்சியின் பொதுச் செயலரும், சகோதரியுமான பிரியங்கா காந்தியும் நேற்று ஹத்ராஸுக்கு சென்றனர்.
ஆனால், ஹத்ராஷுக்கு செல்வதற்கு தடை உத்தரவு இருப்பதாகக்கூறி அவர்களை பொலிஸார் வழிமறித்தனர். இதையடுத்து அவர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். அவர்களின் பின்னால் ஏராளமானவர்கள் நடந்து சென்ற நிலையில் அவர்களை வழிமறித்த பொலிஸார் ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் தடுத்து நிறுத்தினர். இதன்போது பொலிஸார் தள்ளியதில் ராகுல் காந்தி வீழ்ந்தார்.
இதையடுத்து அங்கு முரண் நிலை தோன்றவே ஊரடங்கு உத்தரவை மீறினர் என்ற குற்றச்சாட்டில் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.