இந்தியாவில் ஆகஸ்ட் வரை 6.4 கோடிபேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; செரோ ஆய்வில் தகவல்

தேசிய அளவிலான தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வு (செரோ சர்வே) முதல் கட்டம் மே மாதம் வரை எடுக்கப்பட்டு கடந்த மாதம் ஐசிஎம்ஆர் வெளியிட்டது. அதில் மே மாதம்வரை இந்தியாவில் 64 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தது.

ஆனால், நேற்று வெளியிட்ட 2-வது கட்ட செரோ சர்வே ஆய்வில் எந்த எண்ணிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், ஆகஸ்ட் மாதம் வரை முதல் கட்ட செரோ சர்வேயில் பாதிக்கப்பட்ட அளவிலிருந்து 10 மடங்கு பாதிப்பு இருக்கலாம். அதாவது 6.4 கோடிபேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உத்தேசமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேசிய அளவிலான 2-வது நோய்க்கிருமித் தொற்று செரோ சர்வே ஆய்வு கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 22-ம் தேதிவரை நடத்தப்பட்டது. முதல் சர்வே நடந்த அதே 21 மாநிலங்கள், 70 மாவட்டங்களில் உள்ள 700 கிராமங்கள், வார்டுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் வெவ்வேறு வீடுகளில், வெவ்வேறு நபர்களிடம் நடத்தப்பட்டது.

இதில் 29,082 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், 10 வயதுக்குட் பட்ட மற்றும் அதற்கு மேற்பட்டோரில் 6.6 சதவீதம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வயதுவந்தோர் மக்கள் தொகையில் அதாவது 18வயதுக்கு மேற்பட்டோரில் 7.1 சதவீதம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஊரடங்கு, தனிமைப்படுத்தப்படுத்துதல் போன்றவை மூலம் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிட்ட அளவு தடுக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தொகையில் இன்னும் குறிப்பிடத்தகுந்த அளவு கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

நகர்புறங்களில் உள்ள குடிசைவாழ் பகுதி, நகர்புறங்களோடு ஒப்பிடுகையில் கொரோனா தொற்றுக்கான இடர்கள் இருமடங்காகவும், கிராமப்புறங்களோடு ஒப்பிடுகையில் 4 மடங்காகவும் இருக்கிறது. கிராமப்புறங்களில் 4.4 சதவீதம் தொற்று இருக்கும் பட்சத்தில், நகர்புறங்களில் 8.2 சதவீதமும், நகர்புற குடிசைப்பகுதிகளில் 15.6 சதவீதமாகவும் இருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்துக்குள் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரில் 15 பேரில் ஒருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். முதல்கட்ட சர்வேயில் 18வயதுக்கு கீழ்பட்ட வயதினர் அதிகமாக கொரோனாவில் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது.

ஆனால், 2-வது செரோ சர்வேயில் 18வயதுக்கு கீழ்பட்ட வயதினரும் அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எந்த வயதுப்பிரிவினை, பாலினம் வேறுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் சர்வேயில் ஆய்வு செய்யப்பட்ட மக்கள் தொகையில் 0.73 சதவீதம் பேர் மட்டுமே கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவந்தது.

மே மாதம் நடத்தப்பட்ட சர்வேயில் 130 பேரில் 81 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்த நிலையில், ஆகஸ்ட் மாத்தில் 32 பேரில் 26 பேருக்கு மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் தீவிரமான பரிசோதனை, சிகிச்சை முறை போன்றவற்றால் தொற்றுபரவல் குறைந்துள்ளது.

அதேசமயம், மக்கள் தொகையில் மிகப்பெரிய அளவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆதலால் 5டி முறையான பரிசோதனை, கண்காணித்தல், தடம் அறிதல் , சிகிச்சை, தொழில்நுட்பம் ஆகியவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

டெல்லி, மும்பை, அகமதாபாத், புதுச்சேரி ஆகிய நகரங்களில் “செரோபிரிவேலன்ஸ்” (நோய்த்தொற்று தனிநபர் விகிதப் பரவல்) முதல்கட்டமாக ஜூன் 27 முதல் ஜூலை 10-ம் தேதிவரை நடத்தப்பட்டது. இதில் 21,387 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 23.5சதவீதம் செரோபிரிவேலன்ஸ் கண்டறியப்பட்டது.

2-வது கட்ட செரோபிரிவேலன்ஸ் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை 15 ஆயிரம் மாதிரிகளுக்கு நடத்தப்பட்டது. இதில் 29.1 சதவீதம் இருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட செரோசர்வேயில் செரோபிரிவேலன்ஸ் என்பது 28,503 மாதிரிகளில் 9.3 சதவீதமாகவும், ஸ்பெயினில் 4.3 சதவீதம், பிரிட்டனில் 6.9 சதவீதமாகவும் இருக்கிறது, ஈரானில் 22 சதவீதம் இருக்கலாம்.

இவ்வாறு பார்கவா தெரிவித்தார்