துண்டாடப்பட்ட கை 12 மணி நேர சத்திர சிகிச்சையில் மீளப்பொருத்தப்பட்டது; யாழில் சாதனை

கை துண்டாடப்பட்ட ஒருவருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சையின் ஊடாக அந்தக் கை மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் முதன் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிக்கிச்சையாக இது உள்ளது. இந்த சத்திர சிகிச்சைக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், முழுமையான பங்களிப்பை வழங்கினர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும்போதே மருத்துவர் த.சத்திய மூர்த்தி இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில்:-

“கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைதுண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழியபல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 12 மணித்தியாலங்கள் தொடர் சத்திரசிகிச்சை மேற்கொண்டனர். இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்தமையால் கிளிநொச்சிவாசியின் துண்டாடப்பட்ட கை நல்ல நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சில மாதங்களின் பின்னர் அவரது கை பழையநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் கைகள், கால்துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும். வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும். இது பல சிக்கலான சிகிச்சை முறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும்” என்றார்.