20 ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்; விசாரணைக்கு எடுப்பது குறித்து இன்று பரிசீலனை

இருபதாம் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுப்பது தொடர்பில் இன்று பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹர, சிசிர டீ அப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் குழு இந்த மனுக்களை பரிசீலிக்கும்.

அரசமைப்பின் இருபதாம் திருத்தம் கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்ற முடியாது. சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று வரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு இன்று முதல் பரிசீலிக்கும்.