பிக் பாஸில் கலந்துகொள்கிறேனா? லட்சுமி மேனன்

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக வெளியான தகவலுக்கு நடிகை லட்சுமி மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தமிழ் பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பிரபலமடைந்து, அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களைப் பற்றி யூகமான தகவல்களும் வெளிவந்தவாறு உள்ளது. இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக வெளியான தகவல் குறித்து நடிகை லட்சுமி மேனன் விளக்கம் அளித்துள்ளார். கும்கி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான லட்சுமி மேனன் கொம்பன், சுந்தரபாண்டியன், வேதாளம், ரெக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

“பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. ஒரு ஷோவுக்காக இப்போது அல்ல எப்போதும் அடுத்தவர்களின் தட்டுகளை கழுவுதல் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்யப் போவதில்லை. ஒரு நிகழ்ச்சியின் பெயரில் கேமராவின் முன்பு சண்டையிடப் போவதில்லை” என்று சாடிய அவர், நான் என் சொந்த தட்டுகளை கழுவி என் வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்கிறேன். கேமராவின் முன் நான் அதை செய்ய விரும்பவில்லை. நான் பிக்பாஸ் ஷோவில் கலந்துகொள்வதாக எழும் வதந்தி பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.