தமிழகத்தில் இன்று மட்டும் 5,791 பேருக்கு கொரோனா; 96 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 5 பேர் உள்பட தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் 182 மையங்களில் இன்று ஒரே நாளில் 96,102 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 71,00,660 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 5,706 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது.

வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் உள்பட 46,341 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 80 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகம் கொரோனாவுக்கு 9,313 பேரை பலி கொண்டிருக்கிறது. சென்னையில் இன்றும் 1,280 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 378, சேலம் 296, செங்கல்பட்டு 282, திருப்பூர் 256, கடலூரில் 202 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதாவது, சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.