நல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு நான் பொறுப்பாளியல்ல; மனோ கணேசன் சொல்கின்றார்

“நல்லாட்சிக் கால மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பி பிரயோசனம் இல்லை. அவை பற்றி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜூன் மகேந்திரன், அலோசியஸ் கும்பலிடம் தான் கேட்க வேண்டும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நல்லாட்சி அரசை இன்னமும் கரித்துக் கொட்டும் இனவாத முகநூலர்களின் பதிவுகளை அப்படியே கொப்பியடித்து, எனது முகநூலுக்குள் உள்நுழைந்து, அவ்வப்போது மறுபதிவு செய்யும், ஒருசில அறிவாளி தமிழ் எழுதும் நண்பர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசு என்பது ஒரு கூட்டணி அரசு. அதில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும், வெளியிலிருந்து ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இருந்த முன்னுரிமை தேவைகள் வேறு என்பதை அறிவாளி நண்பர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரை மலையகத் தோட்டங்களில் 07 பேர்ச் காணி, சொந்த தனி வீடு, தமிழ் கிராமங்கள், வட கொழும்பில் சேரிப்புறங்களை ஒழித்துக் கட்டப்பட்ட 13 ஆயிரம் தொடர்மாடி மனைகள், அங்கே வெளியாட்களைக் குடியேற்றாமல், அந்நிலத்து சேரிகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களையே குடியேற்றியமை, மலையகப் புதிய பிரதேச சபைகள், மலைய அதிகார சபை என நீண்ட சாதனை பட்டியல் உண்டுஎன்றார்.