கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருமுன் 20 லட்சம் பேர் உயிரிழக்கலாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருமுன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மனித அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல், இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

இந்தநிலையில், தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்முன் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் அவசர நிலைகளுக்கான தலைவர் மைக்ரேயான் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:-

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஆனால் நல்ல சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்துகளோ இருந்தாலும், இருபது இலட்சம் பேர் உயிரிழப்பதைத் தடுக்க இயலாது” என்றார்.

குளிர்காலம் நெருங்குவதால் வட துருவ நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. ஐரோப்பா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.