20 ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்: கஜித் அறிவிப்பு

ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த சட்டவரைவை தோல்வியடையச் செய்வதே பிரதான நோக்கம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“அரசின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டால் அது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்தாக அமைந்துவிடும். எனவே, 20 ஐ தோற்கடிப்பதே எமது இலக்கு. அதற்காக அனைத்து சக்திகளும் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

20 ஆவது திருத்தச் சட்டவரைவு காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். பொதுவெளியில் கருத்தரங்கு மூலம் தெளிவுபடுத்தி வருகின்றோம். அந்தவகையில் மேற்படி சட்டமூலத்தை தோற்கடிப்ப தற்கான அனைத்து நடவடிக் கைகளும் முன்னெடுக்கப்படும்” என்றார்.