நியூடயமன்ட் கப்பலின் உரிமையாளர்கள் 442 மில்லியன் இழப்பீட்டை இலங்கைக்கு வழங்க இணக்கம்

கிழக்கிலங்கையில் சங்கமான் கந்தமுனைக் கரையோரப் பகுதிக்கு அண்மித்த கடல் பரப்பில் அனர்த்தத்துக்குள்ளான எம்.ரி. நியூடயமன்ட் கப்பலின் உரிமையாளர்களும், அந்தக் கப்பல் ஏற்றிவந்த மசகு எண்ணெய் கம்பனி உரிமையாளர்களும், இலங்கை அரசு கோரிய 442 மில்லியன்ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்வந்துள்ளது.

மசகு எண்ணெய்க் கப்பலான எம்ரி.நியூடயமன்ட் செப்ரெம்பர் மாதம் 3 ஆம் திகதி கிழக்கிலங்கைக் கரையோரத்தில் அனர்த்தத்துக்குள்ளாகியிருந்தது. டுபாயிலிருந்து இந்தியாவுக்கு மசகு எண்ணெய் ஏற்றிச்சென்றபோதே கப்பலின் இயந்திர அறையில் வெடிப்பு ஏற்பட்டு தீ அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

எனவே இத்தீ பரவியமையில் அதனை அணைப்பதற்கு ஏற்பட்ட செலவுத் தொகை, மற்றும் ஏனைய மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டே இடப்பீட்டுத் தொகையாக இலங்கை அரசு கப்பல் உரிமையாளர்களிடம் 442 மில்லியன் ரூபாவை கோரியிருந்தது.

இக் கோரிக்கு தாம் உடன்பட்டு, கோரப்பட்ட பணத் தொகையை செலுத்தத் தாம் தயாராக இருப்பதாக கப்பல் உரிமையாளர்கள், இலங்கை சட்டமா அதிபர் ஊடாக அறிவித்துள்ளனர். 25 கப்பல் சிப்பந்திகள் எம்.ரி.நியூடயமன்ட் கப்பலில் இருந்தனர். இவர்களில் ஒருவர் வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியதுமே இறந்திருந்தார்.

ஏனையவர்கள் இந்தியா – இலங்கைக் கடற்படை, ஆகாயப் படையினரால் பக்குவமாக மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.