சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் திலீபன் நினைவு உண்ணாவிரதம்; பெருமளவு பொலிஸ் குவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது. தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் பலரும் அங்கு வந்துள்ளார்கள்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது 250 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருக்கும் அதேவேளையில் மேலும் பெருந்தொகையானவர்கள் அந்தப் பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள்.

அப்பகுதியில் பஸ்களில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், உண்ணாவிரதிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். எதற்காக இங்கு கூடியுள்ளீர்கள்? என அவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பிய போது, “அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக” என அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைச் சேகரித்த பொலிஸார், அவர்களை காணொளியிலும் படம் பிடித்தார்கள். தொடர்ந்தும் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் நிற்கின்ற போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லச்சந்தி ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கே முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அதற்கு நீதிமன்றம் தடை வதித்ததையடுத்து சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இதனை நடத்துவதற்கு இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்பட்டது.