சட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினை; இந்தியப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பிரதமர் உறுதி

இந்திய மீனவர்கள் இழுவை படகுகளின் மூலம் அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொளி மூலமான கலந்துரையாடலின் போது நேரடியாக முன்வைக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்த வட மாகாண மீனவ சங்கங்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்று இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் இந்திய இழுவை படகுகளை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால், இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய இழுவை படகுகளின் வருகையும், அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக மேற்படி சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமை காரணமாக மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், தமது தொழிலை முன்னெடுத்து செல்வதில் பெரும் நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கி உள்ளதாகவும் வட மாகாண மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாரத பிரதமருக்கு இன்று எடுத்துரைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, கிளிநொச்சி இணைமடு குளத்தை அண்மித்த பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் இதன்போது பிரதமர் பொலிஸாருக்கு அறிவித்தார்.

குறித்த சந்திப்பில், கடற்றொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.எம்.ஐ.ரத்நாயக்க, அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் இராஜாங்க செயலாளர் ஜயந்த சந்திரசோம, கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அருணி ரனராஜா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன, கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் ரன்சிறி பெரேரா, வடக்கு மீனவ சங்கங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.