எஸ்.பி.பி இறுதிப் பயணம்: முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை!

இந்தியாவின் மிக மூத்த பாடகராக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் நேற்று (செப்டம்பர் 25) காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து அவரது உடல் தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணைவீட்டுக்குச் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எல்லைகள் கடந்து ரசிகர்களுக்கு இன்னிசை தந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் மத்திய – மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,

“உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.