கொரோனாவை மறைக்க சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனமே உதவியது; அந்நாட்டு ஆய்வாளர் பரபரப்பு கருத்து

“கொரோனா வைரஸ் குறித்து உலகம் அறிய முன்னரே சீன அரசு அதனை அறிந்திருந்தது. அதனை மறைக்க உலக சுகாதார நிறுவனம் சீன அரசாங்கத்திற்கு உதவியது” என்று, சீனாவை சேர்ந்த வைரஸ்கள் தொடர்பான நிபுணர் லீ மெங் யான் தெரிவித்துள்ளார்.

இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவின் வுஹான் நகரிலேயே பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸை சீனாவே பரப்பியது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது.

இதை உறுதிப்படுத்துவதாக, கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வு நிலையத்திலேயே உருவாக்கப்பட்டது என்று, அந்த ஆய்வு நிலையத்தை சேர்ந்தவரும் வைரஸ்கள் தொடர்பான நிபுணருமான லீ மெங் யான் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இதுகுறித்து பேசிய லீ மெங் யான், “கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனை அறிந்திருந்தது. உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியது” என்று கூறினார்.

சீன அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது