கொரோனாவைக் கட்டுபபடுத்தும் இரண்டாவது மருந்தையும் கண்டுபிடித்தது ரஷ்யா

கொரோனாவை கட்டுப்படுத்தும் இரண்டாவது தடுப்பு மருந்தையும் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இதனை வரும் ஒக்ரோபர் 15 ஆம் திகதி பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘டாஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சேர்பியாவின் வெக்டர் நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளது. கடந்த வாரம் கடைசிக் கட்ட மருத்துவ ஆய்வுகளுக்கு இம்மருந்து உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் ஒக்ரோபர் 15 ஆம் திகதி கொரோனா தடுப்பு மருந்து பதிவு செய்யப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. இதற்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது.

இருப்பினும், மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. இந்நிலையில் இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தவுள்ளது.