பயங்கரவாதத்தின் சர்வதேச வலையமைப்புக்கள் இன்னும் செயற்படுகின்றன; ஐ.நா. உரையில் ஜனாதிபதி

இலங்கை மண்ணிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போதிலும், அதன் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயற்படுகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு உதவுவது, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தார். நேற்று அதிகாலை காணொலி தொழில்நுட்பத்தின் ஊடாக, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத தொடரில் உரையாற்றிய போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75 ஆவது கூட்டத்தொடரின், அரச தலைவர்களுக்கான மாநாடு, இலங்கை நேரப்படி, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள, ஐ.நா. தலைமையகத்தில் காணொலி தொழில்நுட்பத்தின் ஊடாக ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, “போதைப்பொருள் தொடர்பான சமூக பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, இலங்கை ஆழ்ந்த உறுதியுடன் உள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபட்டுள்ள, நாடு கடந்த குற்றவியல் குழுக்களின் அதிகரித்து வரும் நுணுக்கங்கள் குறித்து, இலங்கை தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும், பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கும், ஜனாதிபதி செயலணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது நிறுவப்பட்டதில் இருந்து, பாராட்டத்தக்க பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அனுபவித்த இலங்கை, உள்நாட்டு அல்லது சர்வதேச ரீதியில், அனைத்துப் பயங்கரவாத செயல்களையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.