மாகாண சபைகளை மாற்றியமைப்பது குறித்து இந்தியாவுடன் பேசுவோம்; அமைச்சர் சரத் வீரசேகரா

மாகாண சபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற யோசனை தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு –

மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை எமக்குக் கிடைத்துள்ளது.

அதாவது மாகாண சபைகளை, சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்றே பெரும்பாலானோர் யோசனை முன்வைத்துள்ளனர்.

மேலும், தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன. மாகாணசபைகளை இல்லாமல் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டால் நாட்டை ருகுணு, மாயா, பிகிட்டி என்ற மூன்று மகாணங்களாகப் பிரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக புதிய மாகாணசபைகள் தெரிவு செய்யப்படாத நிலையில் மாகாண சபைமுறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.