உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐ.நா. முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: ஜனாதிபதி கோட்டாபய

நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

“உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் “எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை”, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆட்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்கும் என்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த ஒரு நாட்டையும் பிணையாக வைத்திருக்காததன் மூலம் உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும் இடையிலான கூட்டாண்மயை மிகச் சிறந்த முறையில் பேண முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஐ.நா. தனது 75 ஆவது ஆண்டு நிறைவை ஐ.நா. பொதுச் சபையின் ஒரு நாள் உயர்மட்டக் கூட்டத்துடன் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 திங்கட்கிழமையன்று பன்முகத்தன்மைக்கான கூட்டு உறுதிப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் வகையில் ‘நாம் விரும்பும் எதிர்காலம், எமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள் சபை’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடுவதாக ஐ.நா. உறுப்பு நாடுகள் 2019 ஜூன் மாதம் இணக்கம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுச் சபையின் 75 ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் மற்றும் ஐ. நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ஆகியோர் இக்கூட்டத்தின் ஆரம்ப மற்றும் இரண்டாவது உரைகளை நிகழ்த்தினர். 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக மாநாட்டில் உரைகளை நிகழ்த்தினர்.

“முன்னெப்போதுமில்லாத வகையில் கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது, இது நமது பொருளாதாரங்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் உண்மையில் நமது சமூகங்களை ஒரு சில மாதங்களுக்குள் பெரிதும் பாதித்துள்ளது” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு செயற்திறமான தலையீட்டின் மூலம் கொவிட்-19 இன் சவாலை இலங்கைக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொவிட்-19 ஐ தடுப்பதற்கான தேசியநடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம். இராணுவம், சுகாதாரத்துறை மற்றும் தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் உள்ள சிவில் அதிகாரிகளை அக்குழு உள்ளடக்கியிருந்தது. இலங்கையில் கொவிட்-19 நோயிலிருந்து மீளும் வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90%அதிகமாக உள்ளது. எமது மிகப் பெரிய பலமாக இருந்த ‘தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தலை’ நாம் சார்ந்திருந்தமை எமது வெற்றிக்கு பெரிதும் உதவியது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டில் கொவிட் நோய்த்தொற்றுக்கு ஆளான எந்வொருவரும் கண்டறியப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள் என்ற வகையில் இந்த மாபெரும் நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் நாங்கள் விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.