மும்பையை பழி தீர்த்தது சென்னை: ஃபாப் டூபிளசிஸின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த 13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் முதல் முறையாக ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும் டீ காக்கும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும் அணியின் ஸ்கோர் 46 ஆக இருக்கும்போது ரோஹித் சர்மா, சாம் கரண் பந்துவீச்சிள் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து டிகாக்கும் 33 பந்தில் ஆட்டமிழந்து மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் மற்றும் செளவுரப் திவாரி ஜோடி நிதான அட்டததை வெளிப்படுத்தியது. இருப்பினும் சென்னை அணியில் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அந்த அணி வீரர்கள் அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மும்பை அணியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்த்திக் பாண்டியா மற்றும் பொலார்ட் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மும்பை அணியின் செளரப் திவாரி 42 ரன்களை எடுத்தார்.பந்து வீச்சை பொறுத்தவரை லுங்கி நிக்கிடி 3 விக்கெட்டுகளையும் தீபக் சாகர், மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தல 2 விக்கெட்டுகளையும் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேலும் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களின் ஒருவரான ஃபாப் டூ பிளசிஸிஸ் மூன்று அசத்தலான கேட்சை பிடித்து சென்னை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

இதனை அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான வாட்சன் 4 ரன்களிலும் முரளி விஜய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தனர். இதன் பின்னர் களமிறங்கிய டூ பிளஸிசும் அம்பத்தி ராயுடூவும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். மும்பை அணியின் பந்து வீச்சை நாளாபுறமும் சிதறடித்த அம்பத்தி ராயுடு 33 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். பின்னர் 3 சிக்சர்கள் 6 ஃபோர்களுடன் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் சாகர் பந்துவீச்சில் ராயுடு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஜடேஜா 10 ரன்களுக்கும் சாம் கரண் 18 ரன்களும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஃபாப் டு பிளசிஸ் 42 பந்துகளில் அரைசதம் விளாசியதுடன் அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். இறுதியில் 19.2 ஓவர்களின் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதில் ஃபாப் டூ பிளசிஸ் 44 பந்துகளில் 58 ரன்களுடனும் கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பட்டின்சன், பும்ரா, குர்ணல் பாண்டியா, ராகுல் சாகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றி தோனி கேப்டனாக இருந்து பெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆணியின் 100 ஆவது வெற்றியாகும்