விஷம் தடவிய கடிதம் மூலமாக ட்ரம்பைக் கொல்ல முயற்சி; உளவுத் துறை கண்டுபிடித்தது

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்படடமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட கடிதம் அவரைச் சென்றடையும் முன்னரே உளவுத் துறையினரால் இடைமறிக்கப்பட்டு விட்டது.

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் ‘ரைஸின்’ என்ற விஷம் தடவப்பட்டதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெள்ளை மாளிகைக்கு இவ்வாறான நஞ்சு தடவப்பட்ட கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதன்முறையல்ல. முன்னர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோதும் இவ்வாறான கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதை அனுப்பியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.