வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கண்காணிப்பதற்குப் புதிய செயலி

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்களைக் கண்காணிப்பதற்கான புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலிக்கான விண்ணப்பம் குடிவரவு படிவத்தில் சேர்க்கப்படும் என்றும் இது தொடர்பான திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் அந்தத்தரவுகளைச் சேகரித்துக் கொள்வதற்கு இந்தச் செயலி பயனுள்ளதாக அமையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சர்வதேச விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் கொரோனா தொற்றுக் குறித்து எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் விடுதிகளுக்கு கொவிட் – 19 சான்றிதழை வழங்க ஒரு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டு பராமரிப்பு, விருந்துகள் மற்றும் தங்கு மிட வசதிகள் குறித்துதொடர்பாக சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு விடுதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு வரும் பயணிகள்தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கிமாலி பெர்னாண்டோ, இலங்கையின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்கள் வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளைத் தம்முடன் எடுத்துவரவேண்டும் என்பதுடன், விமான நிலையத்தில் மற்றொரு பி.சி.ஆர் .சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அனைத்து சுற்றுலா பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட விடுதிகளில் சுகாதார அமைச்சினது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.