சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டு அரசால் தனித்துச் செயற்பட முடியாது: எச்சரிக்கும் பொன்சேகா

சர்வதேச நாடுகளை பகைத்துக்கொண்டு தனித்து அரசாங்கத்தால் செயற்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்ததை எதிர்தரப்பினரால் நாடாளுமன்றில் தோற்கடிக்க முடியாது. நாட்டு மக்கள் துரதிஷ்டவசமாக அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள்.

ஆகவே 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பை பலப்படுத்தவே முயற்சிக்கிறோம். சர்வதேச நாடுகளைப் பகைத்துக்கொண்டு தனித்து அரசாங்கத்தால் செயற்பட முடியாது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தால் ஜனநாயக நாடுகள் இலங்கையைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் சர்வாதிகாரமான ஆட்சிக்கு செல்லும் மார்க்கத்தைக் காண்பித்துள்ளது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்ட மூலவரைவு தொடர்பில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியான திருத்தத்தை மீளாய்வு செய்ய 9 பேர் அடங்கிய குழுவை நியமித்தார். 20 ஆவது திருத்தத்தின் குறைப்பாடுகள் திருத்தம் செய்யப்பட்டு குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஜனாதிபதி பொருட்படுத்தவில்லை. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது திருத்த மூலவரைவு எவ்வித மாற்றங்களுமின்றி நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

தவறினை தைரியமாக சுட்டிக்காட்ட முடியாத நெருக்கடியான நிலைக்குள் ஆளும் தரப்பினர் தள்ளப்பட்டுள்ளார்கள். அரசமைப்பின் 20 ஆவது திருத்ததை எதிர் தரப்பினரால் நாடாளுமன்றில் தோற்கடிக்க முடியாது. துரதிஷ்டவசமாக அரசாங்கத்தின் வசம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்படுகிறது.

மக்களும் போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து அரசாங்கத்தை ஆதரித்தார்கள். இதன் விளைவுகளைத்தற்போது உணர்ந்து கொண்டுள்ளார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பல ஏற்பாடுகள் அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ள போது அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகக் கருத்துரைக்கிறது.

சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அரச வருமானம், செலவினங்களை ஜனாதிபதியால் எவ்வாறு நிர்வகிக்க முடியும்? முறையற்றசெயற்பாடுகளுக்காகவே கணக்காளர் நாயகம் ஆணைக்குழு இரத்து செய்யப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜனநாயக நாடுகள் இலங்கையைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படும், ஆகவே நாட்டு மக்கள் அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் முதலில் தெளிவு பெற்று அரசியல் கட்சி ஆதரவைப் புறம் தள்ளி நாட்டுக்காக ஒன்றுப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.