பொறுப்புக் கூறல் பொறிமுறையிலிருந்து அரசாங்கம் விலக முடியாது; சிறிதரன் எம்.பி. கூறுகின்றார்

ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்தும் விலகுவது பற்றி இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதே தவிர, இலங்கையை விலக்கிவிட்டோம் என்று ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அதன் அங்கத்துவ நாடுகளோ கூறவில்லை. எனவே, பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவழங்கல் பொறிமுறையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகமுடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்தார். இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் மனித உரிமைகள் ஆணைக்குழு, உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய கட்டமைப்புக்களின் சுதந்திரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் அந்த அறிக்கையின் ஊடாக எச்சரித்திருக்கின்றார்.

எனினும் இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல, ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்ற அனைத்தையும் கவனத்திலெடுக்க வேண்டும் அல்லது அவற்றுக்கமைவாகச் செயற்படவேண்டும் என்ற அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று குறிப்பிட்டார். அவ்வாறெனின் ஐ.நா.விலிருந்து விலகலாம் அல்லவா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது நல்ல யோசனை என்றும் அதன் முதற்கட்டமாகவே ஐ.நா.தீர்மானத்திலிருந்து விலகும் முடிவை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று வினவிய போது சிறீதரன் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்தும் விலகுவது பற்றி இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதே தவிர, இலங்கையை விலக்கிவிட்டோம் என்று ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அதன் அங்கத்துவ நாடுகளோ இன்னும் கூறவில்லை.

இலங்கையில், இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன என்பதற்குக்கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை, 2015 ஆம் ஆண்டில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டார்” என்றார்.