20 ஆவது திருத்தம் குறித்த மீளாய்வு அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும்; கரு ஜயசூரிய வலியுறுத்து

“தம்மை ஆளும் மீயுயர் சட்டமான அரசமைப்பு எவ்வாறு திருத்தப்படுகின்றது என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது. எனவே, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்” என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

முன்மொழியப்பட்டிருக்கும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு அவசரம் காண்பிக்கக்கூடாது என்றும், முதலில் அந்த யோசனை விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கரு ஜயசூரிய தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

அதுமாத்திரமன்றி 19ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்புக்கள் 20ஆவது திருத்தத்தின் மூலம் நீக்கப்படுவது குறித்தும் அவர் விசனம் வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இதுகுறித்து அவர் தனது “ருவிட்டர்’ பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“அரசால் முன்மொழியப்பட்ட அரசமைப்புக்கான 20ஆவது திருத்த யோசனையை மீளாய்வு செய்வதற்கான பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தாமதமின்றி உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அரசமைப்பு என்பது ஓர் இரகசிய ஆவணமல்ல.

தம்மை ஆளும் மீயுயர் சட்டத்தில் எத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. ஒன்றை செயற்படுத்துகின்ற நடைமுறையில் ஜனநாயகம் இல்லாவிடின், அந்த விடயக் கட்டமைப்பில் ஜனநாயகம் இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.