13 ஆவது திருத்தம் குறித்து ஆளும் கட்சி இரட்டை வேடம் போடுகின்றது; ஐக்கிய மக்கள் சக்தி

“இனப் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்டமாகாணசபை முறைமை நீடிக்கப்படவேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். ஆனால் 13 தொடர்பில் ஆளுங்கட்சி இரட்டைவேடம் போடுகின்றது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மாகாணசபை முறைமைநீக்கப்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரால் வெளியிடப்பட்டுவரும் கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை எமது கட்சி, அணி ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. எனினும், 13 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அன்று எதிர்ப்பு தெரிவித்து, முதலாவது மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்து, போராட்டம் நடத்திய சுதந்திரக்கட்சி பின்னர் மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டது. இன்று வேறு கோணத்தில் கருத்து வெளியிடப்படுகின்றது.

குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வு அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். அதற்காக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை நீடிக்கவேண்டும். இதுவிடயத்தில் எமது நிலைப்பாடு மாறாது, இது விடயத்தில் அரசாங்கம் தமது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும்” என்றார்.