மாடல் அழகியின் பாலியல் புகார்: மறுக்கும் ட்ரம்ப்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில் தற்போது அதிபராக இருக்கக் கூடிய டொனால்ட் ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. இந்த சூழலில் முன்னாள் மாடல் அழகி ஏமி டோரீஸ் ட்ரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

தி கார்டியன் ஊடகத்திடம், “1997 செப்டம்பர் 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியைக் காணத் தனது ஆண் நண்பர் ஜாசன் பின்னுடன் சென்றிருந்தேன். அதிபர் ட்ரம்பும் வந்திருந்தார். அப்போது தனக்கு 24 வயது. விஐபி பாக்ஸ் அருகே இருந்த குளியலறைக்கு வெளியே ட்ரம்ப் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அனுமதியின்றி முத்தமிட்டார். நான் முழுவதுமாக ட்ரம்பின் பிடியிலிருந்தேன். அவரிடமிருந்து என்னால் மீள முடியவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போதே இந்த விசயத்தை வெளியே சொல்லி இருப்பேன். ஆனால் எனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் சொல்லவில்லை. தற்போது எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். என்னுடைய மகள்களுக்கு 13 வயதாகிறது. அவர்கள் விரும்பாத எதையும், யாரேனும் அவர்களிடம் செய்யும் போது, அதை அனுமதிக்கக் கூடாது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நான் அமைதியாக இருக்க வில்லை. அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எமியின் பாலியல் குற்றச்சாட்டை ட்ரம்ப் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது ஆதாரமற்ற கதை என்று வழக்கறிஞர் ஜென்னா எல்லிஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஆதாரமற்ற இந்த கதையின் வெளியீட்டிற்கு கார்டியன் பொறுப்புக் கூற ஒவ்வொரு சட்ட வழிமுறைகளையும் நாங்கள் கையில் எடுத்துள்ளோம். இது தேர்தலுக்கு முன்பு அதிபர் ட்ரம்பின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் போது எமியுடன் வந்த ஆண் நண்பர், இதுகுறித்து எனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று தெரிவித்ததாகவும், இந்த சம்பவத்துக்குப் பின்னர் ட்ரம்ப்பைப் பலமுறை எமி சந்தித்துள்ளார் என்றும் ட்ரம்ப் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.