கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐ.பி.எல். இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகிறது

ஐ.பி.எல். ருவென்ரி – 20 தொடரின் 13 ஆவது தொடர் இன்று சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின், இன்று நடக்கும் முதல் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ_ம் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

வழக்கம் போன்றில்லாமல் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடக்கவுள்ளன. ஐ.பி.எல். ஆட்டத்தைப் பார்வையிட எந்த ரசிகருக்கும் அனுமதியில்லை. இதுபோல பௌண்ட்ரி, சிக்ஸர் கள் அடிக்கப்படும்போது சியர்ஸ் லீடர்ஸ் எனப்படும் நடன அழகிகளின் ஆட்டம் இம்முறை இல்லை. வெறிச்சோடிய மைதானம் வீரர்களின் உற்சாகத்தை குறைக்கும் என்பதால், ஸ்ரேடியத்தில் பெரிய திரையில் ரசிகர்கள் கைதட்டும் காட்சி ஒளிபரப்பப்படும்.

பங்கேற்கும் வீரர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு 5 நாள் இடைவெளியிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். யாராவது வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்பட்டால் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார். கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தும் வரை அவர் விளையாட முடியாது.

விளையாடும் வீரர்கள் ஆட்டம் மைதானத்திற்குள் நுழையும் வரை முகக் கவசம் அணிவது கட்டாயம். எப்போதும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். நாணயச் சுழற்சியின்போது அணித் தலைவர்கள் கைகுலுக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இடைவேளையின்போது தண்ணீர், குளிர்பானங்கள் எடுக்கும்போது வீரர்கள் கையை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின்னரே பருக வேண்டும்.

வெளிநபர்களுடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.