மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்க முடியாது; சரத் வீரசேகர சொல்கின்றார்

“மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் மக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப வழங்கப்படுமே தவிர ஒருபோதும் வேறுபடுத்திக் கொடுக்கமுடியாது” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நேற்று அரச அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அன்கு மேலும் கூறுகையில்-

மாகாணசபை முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என நான் குறிப்பிட்ட தனிப்பட்ட கருத்தை அரசியல்வாதிகள் அரசியல் மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாற்றியமைத்துவிட்டனர்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டபோது நான் கடுமையாக எதிர்த்தேன். அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே கருத்துரைக்கின்றேன்.

இந்தியாவினால் 13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு கொண்டு வரப்படவில்லை. அரசியல் உள்நோக்கங்களுக்காகவே 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

அதிகாரப் பரலவாக்கம் மாகாண சபைகள் ஊடாக இடம் பெறவேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. மாகாண சபைகள் ஊடாக மக்களுக்குச் சிறந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க அதிகாரங்கள் வழங்கப்படுமே தவிர ஒருபோதும் பகிரப்படமாட்டாது. அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே காணப்படும். இவ்விடயத்தில் உறுதியாக உளளோம்” என்றார்.