அஞ்சலிக்கும் உரிமையைத் தடுக்கும் செயலைக் கைவிடுங்கள்; தமிழ்க் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையைத் தடுக்கும் அடக்கு முறைச் செயற்பாட்டை உடன் கைவிடுமாறு தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றமை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயத் தமிழ்க் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடின.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள், ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகியவற்றின் தலைவர்கள், பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையைத் தடுக்கும் விதமாக அரசு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தடையை விதித்துள்ளதாகவும், இது ஐ.நாவில் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அன்னை பூபதி நினைவு நாள், மாவீரர் நாள் ஆகியவற்றுக்கும் இந்தத் தடை தொடருமென்பதால், இதை அனுமதிக்க முடியாது. அடிப்படை உரிமைகளை மீளப்பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

இறந்தவர்களை அஞ்சலிக்கவும், கௌரவிக்கவும் உள்ள தமிழ் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும்படி உடனடியாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் கையெழுத்திட்டு ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் மூலம் கோருவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

உடனடியாக இந்தக் கடிதத்தை அனுப்பவதென்றும், அதற்கு அவர்களின் பதிலைப் பொறுத்து அடுத்த கட்டநடவடிக்கையை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அரசுக்கு எதிரான ஜனநாயக வழிப்போராட்டங்களை அறிவிக்கவேண்டுமெனப் பலரும் வலியுறுத்தியபோதும், முதலில் அரசுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் விதமாக கடிதத்தை அனுப்புவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்துக்கு அரச தரப்பின் பதிலைப் பொறுத்து, மீளச் சந்தித்து அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதென முடிவானது.