20 ஆவது திருத்தம் வந்தால் பாராளுமன்றம் தபால் நிலையமாகிவிடும்: கரு ஜயசூரிய எச்சரிக்கை

அரசாங்கம் முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தம் அனுமதிக்கப்பட்டால் பாராளுமன்றம் தபால் நிலையம் போன்று ஆகிவிடும் எனத் தெரிவித்த, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கொண்டுவரப்படும் அனைத்துப் பிரேரணைகளையும் அங்கீகரித்து முத்திரை ஒட்டும் வேளையை மாத்திரமே பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டிவரும் என்றும் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதிக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல 19 ஆவது திருத்தத்தில் எந்தத் தடைகளும் இல்லை. அவ்வாறு இருக்குமானால் அதனை அறிந்து கொள்ள நாங்களும் விருப்பமாகவுள்ளோம். அதனால், அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தை அவசரப்பட்டு கொண்டுவந்து நாட்டிற்குள் பிரச்னையை அதிகரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்க்கும் அடிப்படை மாற்றங்கள் எனும் தலைப்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.