ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகும் கொழும்பு துறைமுக நகர் பகுதிக்கு பிரதமர் கண்காணிப்பு சுற்றுப்பயணம்

கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஆறாவது ஆண்டு பூர்த்தியான நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

துறைமுக நகரின் இலகு ரக படகுகள் தரிப்பிடம், பொது கடற்கரை ஆகிய பகுதிகளை கண்காணித்த பிரதமர் அங்கு நிறுவப்பட்டுவரும் அக்வா கோல்ப் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்து கோல்ப் விளையாட்டிலும் ஈடுபட்டார்.

தொடர்ந்து துறைமுக நகர மத்திய பூங்காவில் பிரதமரினால் மார மரமொன்று நடப்பட்டது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரின் மாதிரி வடிவத்தை கொண்ட கண்காட்சி கூடத்திற்கு சென்ற பிரதமர், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் விதம் தொடர்பில் கேட்டறிந்தார்.

அங்கு கருத்து தெரிவித்த பிரதமர்,

‘சீன ஜனாதிபதியும் நானும் ஆரம்பித்த இந்த திட்டத்திற்கு இன்றுடன் ஆறு வருடங்கள் பூர்த்தியாகின்றது. கடந்த காலத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் காரணமாக இத்திட்டம் சுமார் 2 வருடங்கள் தாமதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் துறைமுக நகர திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்கால இலங்கையின் பிரதான வருவாய் மார்க்கமாக கொழும்பு துறைமுக நகர திட்டம் விளங்கும். அதன்மூலம் சுமார் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இத்திட்டத்திற்கான மொத்த முதலீடு 15 பில்லியன் டொலராகும். இந்த நாடு கடலால் அரிக்கப்படும் என்றே நாம் சிறு வயதில் அறிந்திருந்தோம். ஆனால் முதல் முறையாக நாம் கடலை எமது நாட்டுடன் இணைத்து கொண்டுள்ளோம். கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவு வழங்கும் சீன அரசாங்கத்திற்கு நாம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். சீன மக்கள் குடியரசின் தேசிய தினம் ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு அடுத்த வருடத்துடன் 100 ஆண்டுகள் ஆகவுள்ளன. அதற்கு நாம் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சீன ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து சீன மக்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.’ என பிரதமர் தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களினதும் அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் கொழும்பு துறைமுக நகர திட்டம் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் குறுகிய நோக்குடைய வேலைத்திட்டம் காரணமாக துறைமுக நகர திட்டம் ஓராண்டிற்கு அதிகமான காலம் தடைப்பட்டது.

துறைமுக நகத்திற்காக 269 ஹெக்டேயர் கடற்பரப்பை நிரப்பி நிலம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், 3.2 கிலோமீற்றர் நீளமான கடற்கரையை நிர்மாணிக்கும் பணிகள் இதுவரை நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

குறித்த சந்தர்ப்பத்தில் கைத்தொழில் துறை அமைச்சர் விமல் வீரவன்ச, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், இலங்கைக்கான சீன பதில் தூதுவர் ஹு வெய், கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜியன் ஹோய் லிங்க் உள்ளிட்ட துறைமுக நகர திட்டத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.