யாழ். பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் தமது கேள்வியின் போது, அரசாங்கம் தேர்தல் காலங்களில் நாட்டின் பல்கலைக் கழகங்களில் பகிடிவதையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு தெரிவித்திருந்தது. எனினும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் புதிய மாணவர்கள் மத்தியில் பகிடிவதை இடம்பெற்றுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அது தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதென கேள்வி எழுப்பினர்.

கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அது தொடர்பில் அரசாங்கம் தீவிரமான கவனம் செலுத்தி வருகின்றது புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பில் செயல்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.